
பின்வரும் பகுதியை படிக்கவும் அல்லது கேட்கவும்
சமாரிய பெண்ணும் இயேசுவும்
4:1யோவானைவிட இயேசு அநேகம் பேரைச் சீடராக்கி, அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்விப்பட்டார்கள். 2ஆனால் திருமுழுக்கு கொடுத்தது இயேசு அல்ல, அவருடைய சீடரே அதைச் செய்தார்கள். 3பரிசேயர் கேள்விப்பட்டதைக் கர்த்தர் அறிந்தபோது, அவர் யூதேயாவைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார்.4இயேசு சமாரியா வழியாகப் போகவேண்டியிருந்தது. 5எனவே அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். அது யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகேயிருந்தது. 6அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. இயேசு பிரயாணத்தினால் களைப்படைந்தவராய், கிணற்றின் அருகே உட்கார்ந்தார். அப்பொழுது நேரம் நண்பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது.
7அவ்வேளையில் சமாரிய பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ளுவதற்கு வந்தாள். இயேசு அவளிடம், “நீ எனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருவாயா?” என்று கேட்டார். 8அப்பொழுது அவருடைய சீடர்கள் உணவு வாங்கும்படி பட்டணத்திற்கு போயிருந்தார்கள்.
9அந்தச் சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் ஒரு யூதன், நானோ ஒரு சமாரியப் பெண். என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்டாள். ஏனெனில் யூதர் சமாரியருடன் பழகுவதில்லை.
10இயேசு அவளுக்குப் பதிலாக, “நீ இறைவனுடைய வரத்தையும், உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிற நான் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். நான் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பேன்” என்றார்.
11அதற்கு அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் மொள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கும்? 12நம்முடையத் தந்தை யாக்கோபு எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தாரே; இந்த கிணற்றிலிருந்து அவரும் அவருடைய பிள்ளைகளும் தண்ணீர் குடித்து, தங்கள் ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தார்களே. எங்கள் தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?” என்று கேட்டாள்.
13இயேசு அதற்குப் பதிலாக, “இந்தத் தண்ணீரைக் குடிக்கிற ஒவ்வொருவரும் மீண்டும் தாகமடைவார்கள். 14ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார்.
15அந்தப் பெண் அவரிடம், “ஐயா, அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்; அப்பொழுது நான் இனிமேல் தாகமடைய மாட்டேன். தண்ணீர் மொள்ளுவதற்கு இங்கே வரவேண்டிய அவசியமும் எனக்கு இராது” என்றாள்.
16அப்பொழுது இயேசு அவளிடம், “நீ போய் உன் கணவனை கூட்டிக்கொண்டு வா” என்றார்.
17“அதற்கு அவள், எனக்கு கணவன் இல்லை,” என்றாள்.
இயேசு அவளிடம், “எனக்குக் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். 18ஐந்து கணவன்மார் உனக்கு இருந்தார்களே, இப்பொழுது உன்னுடன் இருக்கிறவன் உன்னுடைய கணவன் அல்ல. நீ சொன்னது உண்மைதான்” என்றார்.
19அப்பொழுது அந்தப் பெண், “ஐயா, நீர் ஒரு இறைவாக்கினர் என்று நான் கண்டுகொண்டேன். 20எங்கள் தந்தையர் இங்கிருக்கும் மலையிலே இறைவனை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களான நீங்களோ, வழிபட வேண்டிய இடம் எருசலேமிலேயே இருக்கிறது என்று சொல்கிறீர்கள்” என்றாள்.
21அதற்கு இயேசு: “அம்மா, நீ என்னை நம்பு; நீங்கள் பிதாவை இந்த மலையிலும், எருசலேமிலும் வழிபடாத காலம் வருகிறது. 22சமாரியராகிய நீங்களோ அறியாததையே ஆராதிக்கிறீர்கள்; யூதர்களாகிய நாங்களோ அறிந்திருப்பவரையே ஆராதிக்கிறோம். ஏனெனில் யூதரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது. 23ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. உண்மையாய் ஆராதிக்கிறவர்கள், அப்பொழுது பிதாவை ஆவியிலும் உண்மையிலும் ஆராதிப்பார்கள். ஏனெனில் அவ்விதம் தன்னை ஆராதிக்கிறவர்களையே பிதா தேடுகிறார். 24இறைவன் ஆவியாயிருக்கிறார். அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியிலும் உண்மையிலும் அவரை ஆராதிக்க வேண்டும்” என்றார்.
25அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்பட்ட மேசியா வருகிறார். அவர் வரும்போது எல்லாவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
26அதற்கு இயேசு அவளிடம், “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்று அறிவித்தார்.
சமாரியர் பலர் இயேசுவை விசுவாசித்தல்
4:39அந்தப் பட்டணத்திலிருந்த சமாரியர் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள். ஏனெனில், “நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்” என்று இயேசுவைக்குறித்து அந்தச் சமாரியப் பெண் சாட்சி கூறியிருந்தாள். 40எனவே அந்தச் சமாரியர் அவரிடம், தங்களுடன் வந்து தங்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கினார். 41அவருடைய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் அதிகமானோர் விசுவாசிகளானார்கள்.42அவர்கள் அந்தப் பெண்ணிடம், “நாங்கள் அவரை நம்புவது நீ சொன்னதைக் கேட்டுமட்டுமல்ல; இப்பொழுது நாங்களே அவர் சொன்னவற்றைக் கேட்டோம். இவர் உண்மையிலேயே உலகத்தின் இரட்சகர் என்பதை அறிந்துகொண்டோம்” என்றார்கள்.
சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு கதையை உங்கள் சொற்களில் மீண்டும் சொல்லுங்கள். நீங்கள் அதை சத்தமாகப் பேச விரும்பலாம், அல்லது அதை எழுதிக்கொள்ளலாம். அதை நினைவில் கொள்ள சிரமப்படுகிறீர்கள் என்றால், அதை மீண்டும் படிக்கவோ கேட்கவோ செய்யுங்கள்.
நீங்கள் கதை பற்றி பரிச்சயமாக உணரும்போது, கீழ்க்கண்ட கேள்விகளை சிந்திக்க அல்லது விவாதிக்க சில நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
Get Discovery Bible Studies on your phone
Discover copyright ©2015-2026 discoverapp.org
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™. பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™, Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. “Biblica” என்பது Biblica, Inc. மூலம் யுனைடெட் ஸ்டேட்ஸ் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை. அனுமதியுடன் பயன்படுத் தப் படுகிறது.