
பின்வரும் பகுதியை படிக்கவும் அல்லது கேட்கவும்
23:32குற்றவாளிகளான வேறு இரண்டுபேரையும், மரணதண்டனைக்காக இயேசுவுடனேகூட கொண்டுபோனார்கள். 33அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். 34அப்பொழுது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். படைவீரர்கள் சீட்டுப்போட்டு அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்.
35மக்கள் இதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அதிகாரிகள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான்; இவன் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, அவருடைய கிறிஸ்துவாய் இருந்தால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும்” என்று சொல்லி, ஏளனம் செய்தார்கள்.
36படைவீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, 37“நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள்.
38அவருக்கு மேலாக ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது, அதில் இப்படி எழுதியிருந்தது.
இவர் யூதருடைய அரசன்.
39அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீர் கிறிஸ்து அல்லவா? உன்னையும், எங்களையும் விடுவியும்” என்று அவரை இகழ்ந்தான்.
40ஆனால் மற்ற குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே. 41நாம் நியாயப்படி தண்டனை பெற்றிருக்கிறோம். நமது செயல்களுக்கேற்றதையே பெற்றிருக்கிறோம். இவரோ, எந்த தவறும் செய்யவில்லை” என்றான்.
42பின்பு அவன் இயேசுவிடம், “இயேசுவே, உமது அரசில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என்றான்.
43அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இன்றைக்கே நீ என்னுடன்கூட சொர்க்கத்தில் இருப்பாய்” என்றார்.
இயேசுவின் மரணம்
44அப்பொழுது பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. 45சூரியன் இருளடைந்தது. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. 46இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொல்லி, அவருடைய கடைசி மூச்சைவிட்டார்.
47நூற்றுக்குத் தலைவன் நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான். 48இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக, கூடியிருந்த மக்கள் எல்லோரும் நடந்ததைக் கண்டபோது, அவர்கள் தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்கள். 49ஆனால் இயேசுவை அறிந்தவர்களும், கலிலேயாவில் இருந்து அவரைப் பின்பற்றி வந்த பெண்களும், தூரத்தில் நின்று இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் அடக்கம்
50நீதிமன்றத்தின் அங்கத்தினராயிருந்த, யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒருவன் இருந்தான். அவன் நல்லவனும், நீதிமானாயிருந்தான். 51அவன் அவர்களுடைய தீர்மானத்திற்கோ, அவர்களுடைய செயலுக்கோ உடன்பட்டிருக்கவில்லை. அவன் யூதேயாவின் ஒரு பட்டணமான, அரிமத்தியா என்ற இடத்தைச் சேர்ந்தவன். அவன் இறைவனுடைய அரசுக்காகக் காத்திருந்தான். 52அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவினுடைய உடலைத் தரும்படி கேட்டான். 53பின்பு அவன் உடலைக் கீழே இறக்கி, ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறையில், இதுவரை எவருடைய உடலுமே வைக்கப்படவில்லை. 54அது ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வுநாளின் தொடக்கமோ நெருங்கிக் கொண்டிருந்தது.
55கலிலேயாவிலிருந்து இயேசுவுடன் வந்திருந்த பெண்கள், யோசேப்புக்குப் பின்னேசென்று கல்லறையையும், அதில் எப்படி இயேசுவினுடைய உடல் கிடத்தப்பட்டது என்பதையும் பார்த்தார்கள். 56பின்பு அவர்கள் வீட்டுக்குப்போய், நறுமணப் பொருட்களையும், நறுமணத் தைலங்களையும் ஆயத்தம் செய்தார்கள். ஆனால் கட்டளையின்படியே, ஓய்வுநாளில் அவர்கள் ஓய்ந்திருந்தார்கள்.
சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு கதையை உங்கள் சொற்களில் மீண்டும் சொல்லுங்கள். நீங்கள் அதை சத்தமாகப் பேச விரும்பலாம், அல்லது அதை எழுதிக்கொள்ளலாம். அதை நினைவில் கொள்ள சிரமப்படுகிறீர்கள் என்றால், அதை மீண்டும் படிக்கவோ கேட்கவோ செய்யுங்கள்.
நீங்கள் கதை பற்றி பரிச்சயமாக உணரும்போது, கீழ்க்கண்ட கேள்விகளை சிந்திக்க அல்லது விவாதிக்க சில நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
Get Discovery Bible Studies on your phone
Discover copyright ©2015-2026 discoverapp.org
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™. பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™, Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. “Biblica” என்பது Biblica, Inc. மூலம் யுனைடெட் ஸ்டேட்ஸ் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை. அனுமதியுடன் பயன்படுத் தப் படுகிறது.