
பின்வரும் பகுதியை படிக்கவும் அல்லது கேட்கவும்
உலகத்தில் பாவம்
6:1பூமியில் மனிதர் பெருகத் தொடங்கியபோது, அவர்களுக்கு மகள்கள் பிறந்தார்கள்; 2இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களுடைய மகள்கள் அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். 3அப்பொழுது யெகோவா, “என்னுடைய ஆவி என்றைக்கும் மனிதரோடு போராடுவதில்லை, அவர்கள் அழிவுக்குரிய மாம்சமே; அவர்களின் வாழ்நாள் நூற்று இருபது வருடங்களே” என்றார்.4அதே நாட்களில், நெபிலிம் என்னும் இராட்சதர்கள் பூமியில் இருந்தார்கள்; இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனுக்குலப் பெண்களுடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்ற காலத்தில் அவர்கள் இருந்தார்கள். அதற்கு பின்பும் அவர்கள் இருந்தார்கள். அவர்களே முற்காலத்தில் புகழ்பெற்ற மனிதரான மாவீரர்களாய் இருந்தவர்கள்.
5பூமியில் மனிதனின் கொடுமைகள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கின்றன என்பதையும், அவன் எப்பொழுதும் தன் இருதய சிந்தனைகள் ஒவ்வொன்றிலும் தீமையின் பக்கம் மட்டுமே சாய்கிறான் என்பதையும் யெகோவா கண்டார். 6அதனால் யெகோவா பூமியில் மனிதனை உண்டாக்கியதைக் குறித்து வருத்தப்பட்டார்; அவருடைய இருதயம் வேதனையால் நிறைந்தது. 7அப்பொழுது யெகோவா, “நான் படைத்த இந்த மனுக்குலத்தைப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்; மனிதரோடு விலங்குகளையும், நிலத்தில் ஊரும் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அழித்துப்போடுவேன்; அவர்களை உண்டாக்கியதைக் குறித்து எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். 8ஆனால் நோவாவுக்கு யெகோவாவினுடைய பார்வையில் தயவு கிடைத்தது.
நோவாவும் பெருவெள்ளமும்
9நோவாவின் வம்சவரலாறு இதுவே:
நோவா நீதியான மனிதனும் தன் காலத்தில் வாழ்ந்த மக்களில் குற்றமற்றவனுமாய் இருந்தான்; அவன் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். 10நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள்.
11பூமி, இறைவனின் பார்வையில் சீர்கெட்டதாகவும் வன்முறையால் நிறைந்ததாகவும் இருந்தது. 12பூமியில் உள்ள மனிதர் எல்லோரும் சீர்கெட்ட வழியில் நடந்ததால், பூமி எவ்வளவாய் சீர்கெட்டுவிட்டது என்று இறைவன் கண்டார். 13எனவே இறைவன் நோவாவிடம், “நான் எல்லா உயிரினங்களையும் அழிக்க முடிவு செய்துள்ளேன். ஏனெனில், பூமி மனிதர்களின் வன்முறையால் நிறைந்துவிட்டது. அதனால் நான் அவர்களையும் பூமியையும் நிச்சயமாய் அழிக்கப்போகிறேன். 14ஆகவே நீ கொப்பேர் மரத்தால் ஒரு பேழையைச் செய்து, அதில் அறைகளை அமைத்து அதன் உட்புறமும், வெளிப்புறமும் நிலக்கீல் பூசு. 15அந்தப் பேழையைச் செய்யவேண்டிய விதம்: நீளம் முந்நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும், உயரம் முப்பது முழமாகவும் இருக்கவேண்டும். 16பேழையின் மேல்தட்டிலிருந்து ஒரு முழம் உயரத்தில் அதற்கு ஒரு கூரையைச் செய், பேழையின் ஒரு பக்கத்தில் கதவு ஒன்றை வை; பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் ஆகியவற்றை அமைத்துக்கொள். 17வானத்தின் கீழுள்ள எல்லா உயிர்களையும், அதாவது உயிர்மூச்சுள்ள உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்கு, நான் பூமியின்மேல் பெருவெள்ளத்தைக் கொண்டுவரப் போகிறேன். அதனால் பூமியிலுள்ள எல்லாமே அழிந்துபோகும். 18ஆனால், நான் என் உடன்படிக்கையை உன்னுடன் நிலைநிறுத்துவேன்; நீ பேழைக்குள் செல்வாய்; உன்னுடன் உன் மகன்கள், உன் மனைவி, உன் மகன்களின் மனைவிகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு பேழைக்குள் செல். 19உயிரினங்கள் எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு வகையிலும், ஒரு ஜோடியை உன்னுடன் சேர்ந்து உயிர்வாழும்படி பேழைக்குள் அழைத்துச் செல். 20பறவைகளின் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும், விலங்குகளில் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும், நிலத்தில் ஊர்வனவற்றின் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும் உயிருடன் வாழும்படி உன்னுடன் வரும். 21சாப்பிடக்கூடிய எல்லா வகையான உணவுப் பொருட்களையும் உன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும். உனக்கும் அவற்றுக்கும் உணவாகும்படி இவற்றைச் சேமித்து வை” என்றார்.
22இறைவன் தனக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தான்.
7:1அதன்பின் யெகோவா நோவாவிடம், “நீயும் உன் முழுக் குடும்பமும் பேழைக்குள் போங்கள், ஏனெனில், உன்னையே நான் இந்த சந்ததியில் நீதியானவனாகக் கண்டேன். 2மேலும், நீ சுத்தமான விலங்குகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும், சுத்தமில்லாத விலங்குகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு ஜோடியையும், 3பறவைகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும் உன்னுடன் எடுத்துக்கொள்; ஏனெனில் பூமி முழுவதிலும் அவைகளின் பல்வேறு வகைகள் தொடர்ந்து உயிர் வாழவேண்டும். 4இன்னும் ஏழு நாட்களில், நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களும் தொடர்ந்து பூமியின்மேல் மழையை அனுப்பி, நான் உண்டாக்கிய எல்லா உயிரினங்களையும் பூமியின் மேற்பரப்பிலிருந்து அழித்துப்போடுவேன்” என்றார்.
5யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நோவா செய்தான்.
6பூமியின்மேல் பெருவெள்ளம் உண்டானபோது, நோவாவுக்கு 600 வயதாய் இருந்தது. 7பெருவெள்ளத்துக்குத் தப்பும்படி நோவாவும், அவன் மனைவியும், அவனுடைய மகன்களும், அவர்களின் மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள். 8சுத்தமானதும், அசுத்தமானதுமான மிருகங்கள், பறவைகள், நிலத்தில் ஊரும் உயிரினங்கள் யாவும் ஜோடி ஜோடியாக, 9இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக நோவாவிடம் வந்து பேழைக்குள் சென்றன. 10ஏழு நாட்களுக்குப்பின், பூமியின்மேல் பெருவெள்ளம் வந்தது.
11நோவாவுக்கு 600 வயதான அந்த வருடம், இரண்டாம் மாதம், பதினேழாம் நாள் பூமியின் அதிக ஆழத்திலிருந்த ஊற்றுகள் எல்லாம் வெடித்துப் பீறிட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன. 12நாற்பது பகல்களும் நாற்பது இரவுகளும் பூமியில் அடைமழை பெய்தது.
13மழை தொடங்கிய அன்றே நோவாவும், அவன் மனைவியும், சேம், காம், யாப்பேத் என்னும் அவனுடைய மகன்களும், அவர்களுடைய மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள். 14எல்லாவித காட்டு மிருகங்களும் அதினதின் வகைகளின்படியும், எல்லாவித வளர்ப்பு மிருகங்களும் அதினதின் வகைகளின்படியும், தரையில் ஊரும் எல்லாவித உயிரினங்களும் அதினதின் வகைகளின்படியும், எல்லாவித பறவைகளும் அதினதின் வகைகளின்படியும், சிறகுகளுடைய யாவும் அவர்களோடு இருந்தன. 15பூமியிலுள்ள உயிர்மூச்சுள்ள எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக நோவாவிடம் வந்து பேழைக்குள் சென்றன. 16இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, உட்சென்ற எல்லா விலங்குகளும் ஒவ்வொரு உயிரினத்தையும் சேர்ந்த ஆணும் பெண்ணுமாகவே இருந்தன. யெகோவா நோவாவை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார்.
17வெள்ளம் நாற்பது நாட்களாகப் பூமியின்மேல் பெருகிக்கொண்டே இருந்தது, வெள்ளம் பெருகியபோது அது பேழையை நிலத்திற்கு மேலாக உயர்த்தியது. 18பூமியின்மேல் வெள்ளம் உயர்ந்து, பேழை நீரின்மேல் மிதந்தது. 19வெள்ளம் பூமியின்மேல் அதிகமாய்ப் பெருகியதால், வானத்தின் கீழுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. 20வெள்ளம் மலைகளுக்கு மேலாக பதினைந்து முழத்திற்கு மேல் உயர்ந்து அவைகளை மூடியது. 21அப்பொழுது பூமியில் நடமாடிய பறவைகள், காட்டு மிருகங்கள், வளர்ப்பு மிருகங்கள் ஆகிய எல்லா உயிரினங்களும், பூமியில் கூட்டமாய்த் திரியும் எல்லா பிராணிகளும் அழிந்துபோயின; அத்துடன் மனுக்குலம் முழுவதும் அழிந்துபோனது. 22நிலத்தில் வாழ்ந்த தங்களது நாசியில் உயிர்மூச்சுள்ள யாவும் மாண்டுபோயின. 23பூமியிலிருந்த எல்லா உயிரினங்களும் அழிக்கப்பட்டன; மனிதர்களுடன், மிருகங்கள், தரையில் ஊரும் உயிரினங்கள், ஆகாயத்துப் பறவைகள் ஆகிய எல்லாமே பூமியிலிருந்து அழிக்கப்பட்டன. நோவாவும் அவனுடன் பேழைக்குள் இருந்தவர்களும் மாத்திரம் உயிர் தப்பினார்கள்.
24பெருவெள்ளம் நூற்று ஐம்பது நாட்களாக பூமியை மூடியிருந்தது.
8:1இறைவன் நோவாவையும், பேழைக்குள் அவனுடன் இருந்த காட்டு மிருகங்களையும், வளர்ப்பு மிருகங்களையும் நினைவுகூர்ந்தார்; அவர் பூமிக்கு மேலாக ஒரு காற்றை அனுப்பினார், அப்பொழுது வெள்ளம் வற்றத் தொடங்கியது. 2நிலத்தின் ஆழத்திலிருந்த நீரூற்றுக்களும், வானத்தின் மதகுகளும் மூடப்பட்டன. வானத்திலிருந்து மழை பெய்வது நின்றுபோயிற்று. 3படிப்படியாக தண்ணீர் வற்றத் தொடங்கியது. நூற்று ஐம்பது நாட்களுக்குப்பின் தண்ணீர் மட்டம் குறைந்தது. 4ஏழாம் மாதம் பதினேழாம் நாள் பேழை அரராத் என்னும் மலையின்மேல் தங்கியது. 5பத்தாம் மாதம்வரை தொடர்ந்து வெள்ளம் வற்றிக்கொண்டிருந்தது. பத்தாம் மாதம் முதலாம் நாள் மலைகளின் உச்சிகள் தெரிந்தன.
6அதிலிருந்து நாற்பது நாட்கள் சென்றபின், நோவா பேழையில் தான் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, 7ஒரு காகத்தை வெளியே அனுப்பினான், அது தரையில் தண்ணீர் வற்றும்வரை போவதும் வருவதுமாய் இருந்தது. 8பின்பு அவன் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டதோ என்று பார்க்கும்படி ஒரு புறாவை அனுப்பினான். 9பூமியின் மேற்பரப்பெங்கும் வெள்ளமாய் இருந்தபடியால், அதற்கு காலூன்றி நிற்க இடம் இருக்கவில்லை; எனவே அது பேழைக்குத் திரும்பி நோவாவிடம் வந்தது. அவன் தன் கையை நீட்டிப் புறாவைப் பிடித்து, பேழைக்குள் தன்னிடம் எடுத்துக்கொண்டான். 10அவன் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து, திரும்பவும் பேழையிலிருந்து புறாவை வெளியே அனுப்பினான். 11அன்று மாலையில் அந்தப் புறா அவனிடத்தில் திரும்பிவந்தபோது, அதன் அலகில் புதிதாகக் கொத்தியெடுத்த ஒலிவ இலையொன்று இருந்தது. அதனால் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்று நோவா அறிந்துகொண்டான். 12அவன் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து புறாவை மறுபடியும் வெளியே அனுப்பினான், ஆனால் இம்முறை அது அவனிடம் திரும்பி வரவில்லை.
13நோவாவுக்கு 601 வயதாகிய வருடத்தின் முதலாம் மாதம் முதலாம் நாள் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டது. நோவா பேழையின் மேல்தட்டு மூடியைத் திறந்து பார்த்தான், நிலம் உலர்ந்திருந்தது. 14இரண்டாம் மாதம் இருபத்தி ஏழாம்நாளில் பூமி முழுவதும் காய்ந்து போயிற்று.
15அப்பொழுது இறைவன் நோவாவிடம், 16“நீ உன் மனைவியுடனும், உன் மகன்களுடனும் அவர்களுடைய மனைவிகளுடனும் பேழையைவிட்டு வெளியே வா. 17உன்னுடன் இருக்கும் எல்லா விதமான உயிரினங்களாகிய பறவைகள், விலங்குகள், தரையில் ஊரும் உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் வெளியே கொண்டுவா. அவை பூமியில் பலுகி, எண்ணிக்கையில் பெருகட்டும்” என்றார்.
18அப்படியே நோவா தன்னுடைய மகன்களோடும், தன் மனைவியோடும், மகன்களின் மனைவிகளோடும் வெளியே வந்தான். 19எல்லா மிருகங்களும், தரையில் ஊரும் எல்லா உயிரினங்களும், எல்லா பறவைகளும் பூமியில் நடமாடும் உயிரினங்கள் அனைத்தும் வகை வகையாகப் பேழையிலிருந்து வெளியே வந்தன.
20அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் அவன் சுத்தமான மிருகங்கள், சுத்தமான பறவைகள் எல்லாவற்றிலுமிருந்து சிலவற்றைத் தகன காணிக்கைகளாகப் பலியிட்டான். 21மகிழ்ச்சியூட்டும் அந்த நறுமணத்தை யெகோவா முகர்ந்து, தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டதாவது: “மனிதனின் இருதயமோ பிள்ளைப் பருவத்திலிருந்தே, தீமையில்தான் நாட்டம் கொண்டிருக்கிறது; ஆனாலும், மனிதனின் நிமித்தம் நான் இனி ஒருபோதும் நிலத்தைச் சபிக்கமாட்டேன்.” இப்பொழுது செய்ததுபோல், இனி ஒருபோதும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிக்கமாட்டேன்.
22“விதைப்பும் அறுப்பும்,நோவாவுடன் இறைவனின் உடன்படிக்கை
9:1பின்பு இறைவன் நோவாவையும் அவன் மகன்களையும் ஆசீர்வதித்து சொன்னதாவது, “நீங்கள் பலுகி, எண்ணிக்கையில் பெருகி பூமியை நிரப்புங்கள்.” 2உங்களைப்பற்றிய பயமும், பீதியும் பூமியிலுள்ள எல்லா விலங்குகளுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் ஊரும்பிராணிகளுக்கும், கடல்வாழ் மீன்களுக்கும் இருக்கும்; அவை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. 3நடமாடும் உயிரினங்கள் யாவும் உங்களுக்கு உணவாகும். தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்ததுபோல, இப்பொழுது இவை எல்லாவற்றையும் உங்களுக்கு உணவாகக் கொடுக்கிறேன்.4“ஆனாலும், இறைச்சியை அதன் உயிருள்ளபோது அதாவது இரத்தம் அதில் இருக்கும்போது சாப்பிடவேண்டாம். 5உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் நிச்சயமாக ஈடு கேட்பேன். ஒவ்வொரு மிருகத்திடமும் ஒவ்வொரு மனிதரிடமும் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவர்களோடிருக்கும் சக மனிதரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.
6“யாராவது மனித இரத்தத்தைச் சிந்தினால்,7நீங்களோ, இனவிருத்தியில் பெருகி எண்ணிக்கையில் அதிகரியுங்கள்; பூமியில் பெருகி, விருத்தியடையுங்கள்.”
8பின்பு இறைவன் நோவாவிடமும், அவனுடனிருந்த அவன் மகன்களிடமும்: 9“நான் உங்களுடனும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியுடனும் இப்பொழுது என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். 10உங்களுடன் பேழையிலிருந்து வெளியேறிய உயிரினங்களான பறவைகள், வளர்ப்பு மிருகங்கள், காட்டு மிருகங்கள் ஆகிய பூமியின் எல்லா உயிரினங்களுடனும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். 11‘வெள்ளத்தினால் இனி ஒருபோதும் எல்லா உயிர்களும் அழிக்கப்படமாட்டாது; பூமியை அழிக்க இனி ஒருபோதும் வெள்ளப்பெருக்கு உண்டாகாது’ என்று உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்றார்.
12மேலும் இறைவன், “நான் உங்களோடும், உங்களோடிருக்கும் எல்லா உயிரினங்களோடும், வரப்போகும் எல்லா சந்ததிகளோடும் ஏற்படுத்தும் உடன்படிக்கையின் அடையாளம் இதுவே: 13நான், என் வானவில்லை மேகங்களில் அமைத்திருக்கிறேன், பூமிக்கும் எனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளம் இதுவே. 14நான் பூமிக்கு மேலாக மேகங்களை வரப்பண்ணுகையில், அம்மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம், 15உங்களோடும் எல்லாவித உயிரினங்களோடும் நான் செய்துகொண்ட என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். இனி ஒருபோதும் எல்லா உயிர்களையும் அழிக்கும்படி தண்ணீர் வெள்ளமாய் பெருகாது. 16மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம் நான் அதைப் பார்த்து, இறைவனுக்கும் பூமியிலுள்ள எல்லாவித உயிரினங்களுக்கும் இடையே உள்ள நித்திய உடன்படிக்கையை நினைவுகூருவேன்” என்றார்.
17இப்படியாக இறைவன் நோவாவிடம், “எனக்கும் பூமியிலுள்ள எல்லா உயிர்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்று சொன்னார்.
சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு கதையை உங்கள் சொற்களில் மீண்டும் சொல்லுங்கள். நீங்கள் அதை சத்தமாகப் பேச விரும்பலாம், அல்லது அதை எழுதிக்கொள்ளலாம். அதை நினைவில் கொள்ள சிரமப்படுகிறீர்கள் என்றால், அதை மீண்டும் படிக்கவோ கேட்கவோ செய்யுங்கள்.
நீங்கள் கதை பற்றி பரிச்சயமாக உணரும்போது, கீழ்க்கண்ட கேள்விகளை சிந்திக்க அல்லது விவாதிக்க சில நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
Get Discovery Bible Studies on your phone
Discover copyright ©2015-2026 discoverapp.org
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™. பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™, Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. “Biblica” என்பது Biblica, Inc. மூலம் யுனைடெட் ஸ்டேட்ஸ் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை. அனுமதியுடன் பயன்படுத் தப் படுகிறது.